2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தமிழகத்தில் அனுமதி

2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தமிழகத்தில் அனுமதி

2 mins read
f6514f7e-065d-4ab4-82d3-e5dc0ba5d665
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன். படம்: ஊடகம் -

தீபாவளி பண்டிகை வரும் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையாக ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தாலோ, வெடித்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படாத போதிலும், காளி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல், கர்நாடகாவில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இரண்டு மணி நேரம் மட்டுமே தமிழகத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் என கூறினார்.

மேலும், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை செய்ய விதித்துள்ள தடையை மறு பரிசீலனை செய்யக்கோரி ஒடிசா மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர்களுக்கு, தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90% தமிழகத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனையை நம்பி சுமார் 8 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பசுமை பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனக் கூறியுள்ளார். இதனால் தங்களது முடிவுகளை மறுபரிசீலனை செய்து பட்டாசு விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் தம் கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்