சென்னை: அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரஜினிகாந்துதான் ஒரு நல்ல முடிவை எடுக்க வேணடும் என கமல்ஹாசன் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
"ஒரு நண்பனாக ரஜினியை அவரது உடல்நலத்தில் கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். ஆனால், அதேவேளையில் நல்லவர்களும் நேர்மையானவர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான் என் ஆசை. இறுதி முடிவெடுப்பது ரஜினியின் கையில்தான் உள்ளது," என கமல் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "அடுத்தாண்டு மே மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் நல்லவர்களுடன் மநீம கட்சி கூட்டணி அமைக்கும்.
"பழிபோடும் அரசியலாக இல்லாமல், வழிகாட்டும் அரசியலாக மநீம கட்சி செயல்படும்," என்றார்.
"ரஜினியின் உடல்நலம் குறித்து அவரது அறிக்கை வெளியாகும் முன்பே எனக்குத் தெரியும். நான் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன். அவருக்கு அரசியலைவிடவும் இப்போது உடல் நலம்தான் மிகவும் முக்கியம். சட்டமன்றத்தேர்தலில் கண்டிப்பாக அவரது ஆதரவைக் கேட்போம்.
"தமிழகத்தில் மூன்றாவது கூட்டணி அமைந்துவிட்டது. விரும்புபவர்கள் மநீம கட்சியில் இணையலாம்," என்று கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

