தமிழகத்தில் உள்ள விமானநிலையங்களிலும், அங்கிருந்து புறப்படும் விமானங்களிலும் இனிமேல் அறிவிப்புகள் முதலில் தமிழ் மொழியில் இடம்பெறும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் விமான போக்குவரத்து துறையின் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்த பிறகு பத்திரிகையாளரிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
தமிழர்களின் திருநாளான பொங்கலுக்குள் தமிழ்நாட்டின் விமான நிலையங்களிலும் அங்கு வந்து செல்லும் விமானங்களிலும் இத்தகைய அறிவிப்புகள் தமிழ் மொழியில் முதலாவதாக ஒலிக்கும் என்று தன் நம்பிக்கையையும் வெளியிட்டார்.
இக்கோரிக்கையை பரிசீலிக்கவும் மற்றும் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் மத்திய அரசு உறுதியளித்திருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் குறிப்பிட்டார்.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் பல கடிதங்கள் வழியாக தொடர்ந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டின் ஆட்சி மொழியான தமிழ் உட்பட பல்வேறு மாநிலங்களில் பேசப்படும் பிராந்திய மொழிகளுக்கு எந்தவிதத்திலும் பின்னடைவு ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுப்பதும் தங்களது பொறுப்பு என்று இத்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர், ஒரே நேரத்தில் பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கக்கூடிய மென்பொருளை உருவாக்கும் திட்டத்தினை வேகமாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் மற்றும் இது விரைவில் செயல் வடிவம் பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்புகளும் வெளிவந்த ஒரு நாளுக்குள் 16 பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கின்ற யோசனை செயல்வடிவம் பெறுவதற்கும் மற்றும் மத்திய அரசு அனுப்பும் கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைகளையும் உடனடியாக மொழி பெயர்க்கப்படுவதற்கு மத்திய அரசு மேற்கொண்டுவரும் மென்பொருள் திட்டம் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


