சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய்யைச் சுற்றி ஆபத்தான விஷயம் நடந்து கொண்டிருப்பதாக அவரது தந்தை சந்திரசேகர் கூறியுள்ளதால் ரசிகர்களை ஒரு பய உணர்வும் அதிர்ச்சியும் தொற்றியுள்ளது.
"விஜய் ஒரு ஆபத்து வளை யத்தில் தற்போது சிக்கியுள்ளார். அதிலிருந்து அவரைக் காப்பாற்றவே நான் 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற கட்சியைத் தொடங்கினேன்," என்று இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
"நடிகர் விஜய்க்கே தெரியாத ரகசியம் ஒன்று அவரைச் சுற்றி நடந்துகொண்டிருக்கிறது. விஜய்யைச் சுற்றி எப்போதும் சில குற்றவாளிகள் இருந்து கொண்டுள்ளனர். அவர்களால் விஜய்யைச் சுற்றி ஆபத்தான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன," எனத் தெரிவித்துள்ள சந்திரசேகர், எல்லா தந்தை மகனைப் போலவே எங்களுக்கு இடையேயும் அவ்வப்போது சண்டை வரும் என்றும் இருவரும் பேசாமல் இருப்பது சாதாரணமான விஷயம்தான் என்றும் கூறியுள்ளார்.
"என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை. ரசிகர்கள் யாரும் இதில் சேரவேண்டாம். எனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்," என்று விஜய் வெளியிட்ட அறிக்கை அவராக வெளியிட்டது இல்லை என்றும் சந்திரசேகர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, தனது மகன் விஜய்யை மட்டுமல்ல, தன்னையும் ஏமாற்றி இயக்குநர் சந்திரசேகர் கட்சியைத் தொடங்கியதாக விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அந்தக் கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து தான் விலகிவிட்டதாகவும் ஷோபா விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதில் விஜய்க்குத் துளியும் விருப்பம் இல்லை என்றும் தனது கணவர்தான் பிடிவாதமாக அவ்வப்போது விஜய் அரசியலுக்கு வருவது போல வெளியில் பேசிக்கொண்டு இருந்ததாகவும் இதனால் அவருடன் பேசு வதையே விஜய் நிறுத்திக்கொண்ட தாகவும் கூறியுள்ளார் ஷோபா.

