சென்னை: தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ராஜ்யசபா எம்.பி. பதவிையக் கொடுத்து, அவரை தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் நாடெங்கும் தாமரையை அதிக அளவில் பூத்துக் குலுங்கச் செய்யலாம் என பாஜக தரப்பினர் ஆலோசனை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக ரஜினிகாந்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் ஆனால், அவர் இன்னும் தனது இறுதி முடிவை சொல்லவில்லை என்றும் ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
ஒருவேளை, ரஜினிகாந்த் இந்த எம்.பி. பதவியை ஏற்க மறுக்கும் பட்சத்தில், இந்த வாய்ப்பை நடிகை குஷ்பு அல்லது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் மூவருமே கர்நாடக மாநிலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்ற காரணமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் கர்நாடகாவில் வாழ்ந்தவர். குஷ்பு கன்னடப் படமான 'ரணதீரா'வில் அறிமுகமாகி கன்னட மக்களிடத்தில் மிகவும் பிரபலமானவர்.
அண்ணாமலை ஐபிஎஸ், கர்நாடக மாநிலத்தில் போலிஸ் அதிகாரியாகப் பணியாற்றி அந்த மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
இதனால், இவர்கள் மூன்று பேரில் யாரை நியமித்தாலும் எந்தப் பிரச்சினையும் வருவதற்கு வாய்ப்பில்லை என பாஜக தலைமை நம்பு வதாகவும் நம்பத் தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கர்நாடக மாநிலத்தில் அசோக் கஸ்தி என்ற எம்பி கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பின் காரணமாக மரணம் அடைந்தார். அவரது இடத்தை நிரப்பும் வகையில்தான் ரஜினி, குஷ்பு, அண்ணாமலை ஆகிய மூவரில் ஒருவருக்கு ராஜ்யசபா எம்பி பதவியைக் கொடுக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாகத் தேர்வானவர்தான். அதனால், ரஜினிக்கு எம்.பி. பதவி யைக் கொடுப்பதற்கு பாஜகவினர் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.