சென்னை: எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்குள் தமிழக விமான நிலையங்களில் தரையிறங்கும் அனைத்து விமானங்களிலும் முதல் அறிவிப்பு தமிழ்மொழியில் ஒலிக்கும் என தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
"முதலில் தமிழ்மொழியில் அறிவிப்பு வெளியான பிறகே ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலும் அறிவிப்புகள் வெளியாகும்," என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த அறிவிப்பு தமிழர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, விமானங்களில் முதலில் ஆங்கிலம், இந்தி, அதன்பிறகே தமிழ்மொழியில் அறிவிப்புகள் வெளியாகின்றன.
இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த அமைச்சர் பாண்டியராஜன், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை நேரில் சந்தித்து உரையாடினார்.
அப்போது, விமானங்களிலும் விமான நிலையங்களிலும் தமிழில் அறிவிப்புகளை வெளியிடவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியராஜன், "தமிழகத்தில் இருந்து புறப்படும் விமானங்களிலும் மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் விமானங்களிலும் முதல் அறிவிப்பு தமிழில் இடம்பெறவேண்டும் என மத்திய அமைச்சரிடம் கூறினேன்.
"தமிழ் பேசும் மக்களை மகிழ்விக்கும் வகையில், பொங்கலுக்குள் தமிழகத்தில் தரையிறங்கும் அனைத்து விமானங்களிலும் தமிழ்மொழியில் முதல் அறிவிப்பு ஒலிப்பது உறுதி," என்றார்.
இதுகுறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள ஹர்தீப் சிங், "அைமச்சர் பாண்டியராஜன் விமான அறிவிப்புகளை தமிழில் அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். விமான அமைச்சகம் ஏற்கெனவே, அனைத்து விமான நிறுவனங்களிடமும் விமான அறி விப்புகளை முடிந்தவரை தமிழில் வழங்குமாறு ஆலோசனை கூறி யுள்ளதாகவும் நான் அவரிடம் கூறினேன்," என்று தெரிவித்தார்.

