16 பிரிவுகளில் மொத்தம் 98 விருதுகள்; ஐந்தில் 11ஐ தமிழ்நாடு அள்ளியது
சென்னை: இந்தியாவில் தண்ணீர் நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு தலைசிறந்த மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாநிலம் 2019 ஆம் ஆண்டுக்கான தலைசிறந்த விருதைப் பெற்று முதலிடத்தைப் பெற்று இருக்கிறது.
இதோடு மட்டுமின்றி, ஐந்து துறைகளில் தேசிய விருதுகளையும் அது குவித்துள்ளது. ஆறுகளுக்குப் புத்துயிர் அளிப்பதில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாவட்டம், நீர்நிலை பழமைப் பாதுகாப்பு, தலைசிறந்த நகர உள்ளாட்சி அமைப்பு, நீர்நிலைகளைப் பழமை கெடாமல் பாதுகாப்பதில் புத்தாக்கத்தையும் தொழில்நுட்பத்தையும் ஆய்வுகளையும் தலைசிறந்த முறையில் பயன்படுத்துவது, நீர் வளங்களைக் காக்கும் வீரர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் தமிழ்நாட்டிற்கு 11 விருதுகள் கிடைத்துள்ளன.
மொத்தம் 16 பிரிவுகளின் பேரில் 98 விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்த விருது வழங்கும் விழா நவம்பர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் புதுடெல்லியில் நடக்கும். தமிழக அரசு சார்பில் பொதுப் பணித்துறைச் செயலாளர் கே. மணிவாசன் அந்த விருதைப் பெறுவார். ஆற்றுக்குப் புத்துயிர் அளிக்கும் தலைசிறந்த மாவட்டம் என்ற விருதை வேலூர், கரூர் மாவட்டங்கள் பெற்று இருக்கின்றன.
நீர்நிலை பாதுகாப்பு விருது தேசிய அளவில் பெரம்பலூர் மாவட்டத்துக்கு கிடைத்து இருக்கிறது.
தலைசிறந்த நகர உள்ளாட்சி விருதைப் பொறுத்தவரையில் மதுரை மாநகருக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. புத்தாக்கம், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நீர்நிலைகளைக் காத்து தண்ணீரைச் சிக்கனப்படுத்தும் பிரிவில் பல நிறுவனங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.
அதே போல, நீர் வளங்களைக் காக்கும் வீரர்கள் விருதை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான மணிகண்டன், பேராசிரியர் சக்திநாதன் கணபதி பாண்டியன், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு துறை ஆகியவை வென்றுள்ளன.
இதில் தலைசிறந்த பள்ளிகள் பிரிவில் காட்டேறிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு விருது கிடைத்து இருக்கிறது.
இதனிடையே, தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடம் பெற்று இருப்பதைப் பற்றி கருத்து கூறிய அரசாங்க அதிகாரி ஒருவர், விருதுக்கான விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டதும் தமிழக அரசு தான் மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளையும் விரிவாக பட்டியலிட்டு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தது என்று கூறினார்.

