சென்னை: உலகமகா வல்லரசான அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் பல்வேறு முதல் சாதனைகளுடன் துணை அதிபராக கமலா ஹாரிஸ், 55, பதவி ஏற்கிறார்.
தமிழகத்தில் உள்ள திருவாரூர் அருகே இருக்கும் துளசேந்திரபுரம் என்ற கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், துணை அதிபராக போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே தமிழ் உலகம் அவரைப் பாராட்டத் தொடங்கியது.
குறிப்பாக துளசேந்திரபுரம் மக்கள் கமலா ஹாரிஸ் வெற்றியில் மிகவும் நாட்டமாக, பரபரப்பாக இருந்து வந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே இப்போது கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று இருப்பதால் உலகம் முழுவதையும் சேர்ந்த தமிழர்களிடம் இருந்து அமெரிக்க துணை அதிபருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இதில் தமிழக அரசியல்வாதிகளும் சேர்ந்துகொண்டுள்ளனர்.
"அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
"அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக வெற்றி பெற்றிருப்பதன் மூலம் தமிழகத்துக்கு கமலா ஹாரிஸ் பெருமை சேர்த்துள்ளார்," என்று முதல்வர் பழனி சாமி குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின், "இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தலில் தமிழ் பாரம்பரியம் கொண்ட ஒரு பெண்ணை தமது துணை அதிபராக அமெரிக்க மக்கள் தேர்வு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் கமலா ஹாரிஸ் செயல்பாடுகள் அமையட்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட இதர பலரும் அமெரிக்க அதிபருக்கும் துணை அதிபருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

