சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளிலும் போதிய அளவில் தண்ணீர் இருப்பு உள்ளதால், அடுத்த ஆண்டு மே மாதம் வரை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று சென்னை குடிநீா் வாரிய உயர் அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
தண்ணீர்ப் பஞ்சத்தால் தலைநகர் சென்னையும் அதிகம் பாதிக்கப்படுவது உண்டு.
ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் மக்கள் குடங்களைத் தூக்கிக்கொண்டு சாலைசாலையாக அலைந்து கொண்டிருப்பதையும் காண முடியும். ஆனால், வரும் மாதங்களில் இந்த சிரமங்கள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, செங்குன்றம் ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதனால், இந்த ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு அதிகரித்துள்ளதால், அடுத்தாண்டு மே மாதம் வரை சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாத ஒரு சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தாண்டு தென்மேற்கு பருவமழையால் கிடைத்த நீரினாலும் ஆந்திராவின் கிருஷ்ணா நதியில் இருந்து திறந்துவிடப்பட்ட 4 டிஎம்சி தண்ணீராலும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.
இந்த நான்கு ஏரிகளிலும் 11,257 மில்லியன் கனஅடி நீர் இருப்பு வைக்கமுடியும். இவற்றில் தற்போது 6,251 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு 3,009 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு இருந்தது.
தற்போதுள்ள நீரை வைத்து அடுத்த ஆண்டு மே மாதம் வரை சென்னைக்கு தேவையான நீரை வழங்கமுடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

