போலி நோயாளிகளை வைத்தே போலி மருத்துவரைப் பிடித்த எம்.பி.

போலி நோயாளிகளை வைத்தே போலி மருத்துவரைப் பிடித்த எம்.பி.

2 mins read
536a59fe-faec-4669-a149-3444132d73f2
நாமக்கல் எம்.பி. சின்ராஜும் (இடது) கையும் களவுமாக சிக்கிக் கொண்ட போலி மருத்துவர் தங்கராஜும். படம்: தமிழக ஊடகம் -
Google News Preferred Icon

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல, போலி மருத்துவர் ஒருவரைப் போலி நோயாளிகளை வைத்தே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிடித்த சுவையான சம்பவம் நாமக்கல்லில் நிகழ்ந்தது.

நாமக்கல் மாவட்டம், ஆவத்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் தன் வீட்டிலேயே சொந்தமாக மருந்தகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். சுற்றுவட்டார மக்களும் இவரை உண்மையான மருத்துவர் என்றே நம்பி வந்தனர்.

இந்நிலையில், தங்கராஜ் ஒரு போலி மருத்துவர் என நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜுக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திரு சின்ராஜ் தன் ஆதரவாளர்கள் மூவரை நோயாளிகள் போல தங்கராஜிடம் அனுப்பிவைத்தார்.

அதன்படி தங்கராஜின் மருந்தகத்திற்குச் சென்று வந்தபின், இதயத்துடிப்புக் கருவியைப் பயன்படுத்துவது, மருந்து மாத்திரை எழுதித் தருவது என அவர் ஒரு மருத்துவர் போலவே செயல்படுவதாக திரு சின்ராஜிடம் கூறினர்.

இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலரை அழைத்துக்கொண்டு தங்கராஜின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, விசாரணை மேற்கொண்டார் திரு சின்ராஜ். விசாரணையில் அவர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த போலி மருத்துவர் என்பது உறுதியானது.

இதைத் தொடர்ந்து, தங்கராஜை போலிசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மருந்து மாத்திரை எழுதித் தர, புஞ்சைப்புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செல்வம் என்பவரின் பெயர் அச்சிடப்பட்ட மடலேட்டை தங்கராஜ் பயன்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் செல்வத்திடம் விசாரித்தபோது, "அரசு வேலையில் சேருமுன் ஆவத்திபாளையத்தில் 15 ஆண்டுகளாக மருந்தகம் நடத்தினேன். அப்போது, தங்கராஜ் என்னிடம் உதவியாளராக வேலை செய்தார். ஆனால், அவர் சொந்தமாக மருந்தகம் நடத்தி வந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது," என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்