தமிழகத்தில் இருக்கும் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்புப் படக்கருவிகள் பொருத்தப்பட வேண்டும் என்று மாநில காவல்துறைத் தலைமை இயக்குநருக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களைக் கண்ணியமாகவும் மரியாதையாகவும் தோழமையுடனும் நடத்த வேண்டும் என்று காவல்துறையினருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜும் அவருடைய மகன் பென்னிக்சும் சில மாதங்களுக்குமுன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டனர். இதன் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த பிணை மனுவை நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தார்.
"தமிழகத்தில்தான் அதிகளவில் காவல் நிலைய மரணங்கள் நிகழ்கின்றன. மனிதத்தன்மையற்ற இந்தக் குற்றங்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய குற்றங்களில் தொடர்புடையோருக்குப் பிணை வழங்கினால் அது தவறான வழிகாட்டுதலாக அமைந்துவிடும்.
"பொதுமக்களில் பலர் காவல் நிலையங்களுக்குச் செல்லவே இன்னும் அஞ்சுகின்றனர். எளிய மனிதர்கள் முறையாக நடத்தப்படாததே இதற்குக் காரணம். இதுகுறித்துக் காவல்துறைக்குப் பல சுற்றறிக்கைகள் அனுப்பியும் அதை அவர்கள் பின்பற்றுவதில்லை," என்று நீதிபதி சொன்னார்.
அத்துடன், காவல்துறைக்குப் பல உத்தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் அவர் பிறப்பித்தார்.
"எல்லாக் காவல் நிலையங்களிலும், புகார் அளிக்க வருவோரின் உரிமைகள் குறித்து காவல் நிலையங்களுக்குமுன் தமிழிலும் ஆங்கிலத்திலும் தகவல் பலகை வைக்க வேண்டும். அனைத்துக் காவல் நிலையங்களிலும் கண்காணிப்புப் படக்கருவிகளைப் பொருத்தி, அவை முறையாக இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும். கருவி பழுதானால், மூன்று நாள்களுக்குள் அது சரிசெய்யப்பட வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
"குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காவலில் வைக்க காவல்துறை வாகனங்கள் மூலமே அழைத்துச் செல்ல வேண்டும். தனியார் வாகனங்களை ஏற்பாடு செய்தால் அதற்கான செலவைக் காவல்துறையே ஏற்க வேண்டும்," என்று நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டு இருக்கிறார்.