மதுரை ஊத்தங்குடியைச் சேர்ந்த 22 வயது இளையரை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று பட்டப்பகலில், சாலையில் நடந்து சென்றபோது கொலை செய்து, தலையைத் துண்டித்து, சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் இருந்த செயின்ட் மேரி'ஸ் தேவாலயத்தின் வாசலில் வைத்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்தது.
கீழவாசலில் உள்ள பரபரப்பான சாலையில் நேற்று (நவம்பர் 15) நிகழ்ந்த இந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவானதுடன், அந்தப் பகுதியில் சென்றவர்களும் சம்பவத்தை கைபேசியில் படம் பிடித்தனர்.
ஊத்தங்குடியைச் சேர்ந்த முருகானந்தம் என்ற இளையர், தம் நண்பர் முனியசாமியுடன் சேர்ந்து செயின்ட் மேரி'ஸ் தேவாலய சாலை சந்திப்புக்கு அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
ஆயுதங்களுடன் காரில் வந்த கும்பல் ஒன்று அவ்விருவரையும் வழி மறித்தது. அவர்களைப் பார்த்ததும் இருவரும் தப்பியோட முயற்சி செய்தனர். ஆனல், முருகானந்தம் சிக்கிக்கொண்டார். ஆயுதத்தால் தாக்கியதில் முருகானந்தம் உயிரிழந்தார். அவரது தலையைத் துண்டித்து தேவாலயத்தின் வாசலில் வைத்துவிட்டுச் சென்றது அந்த கும்பல்.
முனியசாமி காயங்களுடன் தப்பினார். உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
நகரின் பரபரப்பான பகுதியில் நிகழ்ந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, கொலை செய்த கும்பல் பயன்படுத்திய காரை போலிசார் கண்டுபிடித்தனர். பைபாஸ் ரோட்டில் காரை விட்டுச் சென்றது அந்த கும்பல்.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படும் வேளையில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. சம்பவத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.