சென்னை காசிமேடு பகுதியில் கடலில் குளிக்கச்சென்ற ஐந்து பேர் கடலலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் ஒருவருடைய உடல் கரை ஒதுங்கிய நிலையில், மற்றவர்களை தேடும் பணி தீவிரமாகியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலிருந்து உறவினர் வீட்டுக்கு வந்த ஒரு குடும்பம் நேற்று மாலை காசிமேடு பகுதியில் கடற்கரைப் பகுதிக்குச் சென்றது. அக்கம்பக்கத்தில் சேர்ந்த வேறு சிலரும் அவர்களுடன் கடற்கரைக்குச் சென்றனர். அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென வந்த ராட்சத அலை ஐவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. அவர்கள் அனைவரும் 18 வயதுக்குட்பட்டவர்கள்.
தேடுதல் பணியில் பலர் ஈடுபட்டனர். சில மணி நேரங்களுக்குப் பிறகு அருள்ராஜ் என்ற 17 வயது இளைஞரின் உடல் மட்டும் கிடைத்துள்ளது. மார்ட்டின், மார்கரெட், துர்கா உட்பட மற்ற நால்வரின் உடல்களை காசிமேடு மீனவர்களும், தீயணைப்புத் துறை வீரர்களும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

