திமுக தலைமையால் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், மு.க.அழகிரி புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதாக மீண்டும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை அவரும் மறுக்கவில்லை.
நேற்று முன்தினம் மதுரையில் தமது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார் மு.க.அழகிரி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதரவாளர்களின் கருத்துகளைப் பரிசீலித்த பின்னர் புதுக்கட்சி தொடங்குவது குறித்து உரிய முடிவெடுக்கப்படும் என்றார்.
காலஞ்சென்ற முதல்வர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுக, அழகிரி இடையேயான உறவு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. அவரை கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் உறுதியாக உள்ளனர்.
அழகிரி புதுக்கட்சி தொடங்குவார் என தொடர்ந்து அவ்வப்போது செய்தி வெளியாவதும் அவரே அதை மறுப்பதும் வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தமது ஆதரவாளர்களுடன் அழகிரி கலந்தாலோசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா விவகாரத்தால் கடந்த சில மாதங்களாக தமது ஆதரவாளர்களைச் சந்திக்க முடியவில்லை என்றார்.
"எனது ஆதரவாளர்கள் என்னிடம் தான் உள்ளனர். அனைவரும் நன்றாக உள்ளனர். திமுகவில் புகைச்சல் அதிகமாகியுள்ளது.
"2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் திமுகவின் நிலையை நீங்களே அறிந்துகொள்ளலாம். அதுகுறித்து தற்போது என்னால் கூற முடியாது. ஏனெனில் நான் ஜோதிடன் கிடையாது," என்றார் மு.க.அழகிரி.
திமுகவில் தற்போது உள்ள சில தலைவர்கள் பதவிக்காக மட்டுமே அக்கட்சியில் நீடிப்பதாகக் குறிப்பிட்ட அவர், மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

