எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு குறைந்தபட்சம் ஐம்பது தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அதிமுக தலைமையிடம் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வலியுறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அதிமுக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், பாஜகவின் வேல் யாத்திரையைக் கடுமையாக விமர்சித்து அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான 'நமது அம்மா'வில் கட்டுரை வெளியாகியுள்ளது.
மதத்தின் பெயரால் நடத்தப்படும் வாக்குவங்கி அரசியலை ஏற்க முடியாது என்றும் அனைவரும் தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உணர்ந்து நடக்க வேண்டும் என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகை தமிழக அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அமித் ஷா எதிர்வரும் 21ஆம் தேதி சென்னை வந்து அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.
தமிழகத்தில் கூட்டணி அமைப்பது, தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் தேர்வு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து தமது இந்தப் பயணத்தின் மூலம் அவர் முக்கிய முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் காய் நகர்த்தல்களில் ஒன்றாக, இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற வேண்டுமானால் பாஜகவுக்கு குறைந்தது ஐம்பது தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்பது அமித் ஷாவின் முக்கிய நிபந்தனையாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அண்மையில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெற்றுள்ள வெற்றி அக்கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் அம்சமாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆனால் பாஜகவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், தற்போது அதிமுகவுடன் நட்புறவு பாராட்டி வரும் மற்ற கட்சிகளும் அதிக தொகுதிகளைக் கேட்டு நச்சரிக்கும் என்பதே அக்கட்சியின் கவலையாக உள்ளது.
இந்நிலையில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு அதிமுக அரசு முதலில் தடைவிதித்தது. பாஜகவினர் தடையை மீறி யாத்திரையை மேற்கொள்வதால் ஆங்காங்கே அக்கட்சி நிர்வாகிகள் பலரும் கைதாகி உள்ளனர்.
இதனால் பாஜக தலைமை அதிமுக மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தமிழகத்துக்கு வருகை தர உள்ளார் அமைச்சர் அமித் ஷா.
அவரது வருகையைக் கண்டு யாரும் அச்சமடையத் தேவையில்லை என தமிழக பாஜக நிர்வாகிகள் சிலர் எதிர்க்கட்சிகளை கிண்டலடித்துள்ளனர்.ஆனால் அதிமுக தரப்பிலோ, பாஜக வுக்குப் பதிலடி தரப்பட்டுள்ளது.
"கருப்பர் கூட்டமானாலும் சரி. காவிக்கொடி பிடிப்பவர்களானாலும் சரி, மத அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை" என்று நமது அம்மா நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐம்பது தொகுதி வேண்டும் என்ற முடிவுடன் தமிழகத் தேர்தலுக்காக களமிறங்கி உள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
இந்தக் கோரிக்கையை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது அதிமுக தலைமை.
இதற்கிடையே பாஜகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட் டால் தங்களுக்கும் அக்கட்சியை விட அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்க இருப்பதாக வும் கூறப்படுகிறது.

