தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதித்துள்ள நிலையில், பெரும்பாலான திரையரங்குகள் பார்வையாளர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
தீபாவளியையொட்டி திரையரங்குகளைத் திறக்கலாம் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. எனினும் 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இதையடுத்து சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த 10ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் சுமார் 1,140க்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன. அவற்றுள் சுமார் 800 திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் தீபாவளியையொட்டி ஏழு புதிய தமிழ்க் திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாக இணையத்தில் வெளியீடு கண்டதால், திரையரங்குக்கு வருகை தரும் ரசிகர்கள், பார்வையாளர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
எண்பது விழுக்காடு இருக்கைகள் காலியாகவே உள்ளன. இதனால் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை வீச வாய்ப்பில்லை என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் நோய்த்தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்றார்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் புதிதாக 1,819 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகினர். அதேசமயம் ஒரே நாளில் 2,520 பேர் கொவிட்-19 பிடியிலிருந்து விடுபட்டுள்ளனர் என்று மாநில சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

