மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த தங்களது மகனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை ஒரு தம்பதி மிகவும் வித்தியாசமான முறையில் நடத்தியுள்ளனர்.
ரூ.6 லட்சம் செலவில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்த மகனின் ஆறடி உயர மெழுகுச் சிலையைத் தங்களது திருமண மண்டபத்தில் பொதுமக்களின் பார்வைக்காக அவர்கள் திறந்துவைத்தனர்.
இந்தச் சிலைக்கு இறந்தவரின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தி தங்களது அன்பை வெளிப்படுத்தியது மக்களை நெகிழவைத்துள்ளது.
அவனியாபுரத்தைச் சேர்ந்த முருகேசன்-சரஸ்வதி தம்பதிக்கு மாரி கணேஷ் என்ற மகன் இருந்தார். அத்தம்பதிக்கு இரு மகள்களும் உள்ளனர். மாரி கணேஷுக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து குழந்தைகளும் உள்ளனர்.
இளம் வயது முதலே மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஆர்வம் கொண்ட மாரி கணேஷ், பல போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி உயிரிழந்தார்.


