வேலூரில் ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் கண்ணாடித் துண்டுகளும் கிடந்துள்ளன.
இந்த உணவைச் சாப்பிட்ட ஆறு பேருக்கு வயிறு எரிச்சல், தொண்டை வலி இருந்ததால் வேலூரில் உள்ள மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அத்துடன், அதிர்ச்சியூட்டும் இச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.
வேலூர், சத்துவாச்சாரியை அடுத்த அலமேலு மங்காபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குத் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சத்து வாச்சாரியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று முன்தினம் நடந்தது. காலையில் நிச்சயதார்த்தம் முடிந்ததும் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்களுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. அப்போது, ஒருவரது இலையில் கண்ணாடித் துகள்களும் துண்டுகளும் கிடந்தன.
இதுகுறித்து பெண் வீட்டார் கூறுகையில், "ஓட்டலில் பரிமாறப்பட்ட உணவைச் சாப்பிடும்போது இலையில் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டது. அவை அனைத்தும் டியூப் லைட்டில் இருந்து உடைந்த பாகங்கள். ஓட்டல் சமையல் அறையில் இருந்த டியூப்லைட் உடைந்து உணவில் விழுந்துள்ளது. இதனை ஓட்டல் ஊழியர்கள் கவனிக்க வில்லை. அவர்கள் அலட்சியமாக பதில் தெரிவித்தனர்," என்றனர்.

