வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறிவிட்டதால் நாளை மறுதினம் தமிழ்நாட்டில் புயல் கரையேறும் என்று அந்த மாநிலத்தின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை அடுத்து மாநிலம் முழுவதும் முழு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.
'நிவர்' என்று குறிப்பிடப்படும் அந்தப் புயல், நாளை மறுதினம் பிற்பகல் வாக்கில் மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என்று முன்னுரைக்கப்பட்டு இருக்கிறது.
இத்தகைய பருவநிலை காரணமாக இன்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் காலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேக மூட்டம் பரவியதைக் காண முடிந்தது.
ஒரு சில இடங்களில் இலேசான மழையும் பெய்தது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் விளைவாக நாளை முதல் மூன்று நாட்களுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் குறிப்பாக ஆறு மாவட்டகளில் கடும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
புயல் காற்று மணிக்கு 120 கி.மீ. வேகத்தை எட்டக்கூடும் என்று குறிப்பிட்டு இருக்கும் அந்த மையம், இன்று காலை நிலவரப்படி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்குத் தென்கிழக்கே சுமார் 590 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டது.
தாழ்வு மண்டலம், மணிக்குச் சுமார் 15 கி.மீ. வேகத்தில் வடமேற்குத் திசையில் கரையை நோக்கி நகர்ந்து வந்ததாகவும் அந்த மையம் கூறியது.
தமிழ்நாட்டில் 2018ல் 'கஜா' என்ற புயல் வீசி பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. அந்தப் புயலில் இருந்து கற்றுக்கொண்ட பல அனுபவங்களையும் கொண்டு இந்தப் புயலைத் திறம்பட சமாளித்துவிடலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


