வறுமையால் மருத்துவப் படிப்பைக் கைவிட்ட மாணவிகளுக்கு கைகொடுத்தது தமிழக அரசு

வறுமையால் மருத்துவப் படிப்பைக் கைவிட்ட மாணவிகளுக்கு கைகொடுத்தது தமிழக அரசு

2 mins read
18ca7fd1-8236-4545-a57d-9b46c4fa24c3
படம்: தமிழக ஊடகம் -

மாணவிகள் மூவருக்கு அவர்கள் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தைக் கட்டமுடியாத சூழலில் மருத்துவப் படிப்பைத் தொடர்வதற்கான அனுமதி கடிதத்தைப் பெறாமல் வீட்டுக்குத் திரும்பிவிட்டனர்.

இந்த மாணவிகள் மூவருக்கும் செலுத்தவேண்டிய கல்விக் கட்டணத்தைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து மீண்டும் அவர்கள் இந்தப் படிப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் இந்த மாணவிகளின் மருத்துவம் படிக்கும் கனவு நனவாகி உள்ளது.

கடந்த 18 முதல் 20ஆம் தேதி வரை மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கடந்த 19ஆம் தேதி பங்கேற்ற திருப்பூரைச் சேர்ந்த திவ்யா, ஈரோட்டைச் சேர்ந்த கெளசிகா, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தாரணி ஆகிய மூவரும் மருத்துவம் படிப்பதற்கு தனியார் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர்.

ஆனால், அங்கு வசூலிக்கப்படும் கட்டணம் அதிகம் என்பதால் மருத்துவப் படிப்பைத் தொடர்வதற்கான அனுமதி கடிதத்தைப் பெறாமல் மாணவிகள் சென்றுவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, இந்த மாணவிகள் மூவரையும் மீண்டும் அழைத்த மருத்துவக் கல்வி இயக்ககம், எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டாம் என்று கூறி மாணவா் சோ்க்கைக்கான அனுமதிக் கடிதத்தை அவர்களிடம் திங்களன்று வழங்கியது.

இதுகுறித்து மாணவி கௌசிகா கூறுகையில், "கட்டணம் செலுத்துவதற்கான பணத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அனுமதிக் கடிதத்தைப் பெறாமல் சென்றுவிட்டோம். அதன்பின்னா் மருத்துவக்கல்வி இயக்ககம் எங்களை அழைத்து அனுமதியை வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது. கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பதால் எங்களது மருத்துவா் கனவு நனவாகியுள்ளது," என்றாா்.

இதுகுறித்து, "போன உயிர் மீண்டும் வந்ததுபோல் உணர்கிறோம்," என்று கூறியுள்ளனர் மாணவிகள்.