தமிழ்நாட்டில் கொரோனா கிருமித்தொற்று தொடர்ந்து குறைந்து வருவதாகவும் ஆனாலும் அரசாங்கம் முழு விழிப்புநிலையில் பரிசோதனைகளையும் இதர நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்த மாநிலத்தில் நேற்று நண்பகல் நேரத்திற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 1,459 பேர் புதிதாக கிருமித்தொற்றுக்கு ஆளானார்கள். இவர்களையும் சேர்த்து மொத்தம் 781,000 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
புதிதாக ஒன்பது பேர் மரணமடைந்ததாகவும் 1,471 பேர் குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இவர்களையும் சேர்த்து மரண எண்ணிக்கை 11,703 ஆகக் கூடி இருக்கிறது. மொத்தம் 758,000 பேர் குணமடைந்து இருக்கிறார்கள்.
இதனிடையே, தலைநகர் சென்னையிலும் தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதுவரையில் தலைநகரில் பாதிக்கப்பட்டவர்களில் 40 முதல் 49 வரை வயதுள்ளவர்களே அதிகம். பாதிக்கப்பட்டவர்களில் 59.7 விழுக்காட்டினர் ஆண்கள். 40.23 விழுக்காட்டினர் பெண்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.