கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் நானோ தொழில்நுட்பம் குறித்த குறிப்புகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பானை சுடுவதில் தமிழர்கள் நானோ தொழில்நுட்பத்தின் கூறுகளைப் பயன்படுத்தி இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
கீழடி அகழாய்வில் கிடைத்த பானை ஓட்டை ஆய்வுக்கு உட்படுத்தியதில் இக்கூற்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
"சங்க காலத் தமிழர்கள் இரும்பு உருக்குவதிலும் பானை சுடுவதிலும் மிகச் சிறந்தவர்கள். பானை சுடும்போது அதில் வெவ்வேறு வண்ணங்களைப் பூசுவது வழக்கம். அப்படிப் பூசும் வண்ணங்கள் சிதையாமலும் மங்காமலும் இருக்க வேண்டுமென்றால் எவ்வளவு வெப்பநிலை வரை பானைகளைச் சுட வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
"வண்ணம் பூசப்பட்ட பானைகள் உயர் வெப்ப நிலையில் சுடப்படும்போது கார்பன் நானோ குழாய்கள் உருவாகியிருக்க வேண்டும்.
"குறிப்பிட்ட உயர் வெப்ப நிலையில் பானை சுடப்பட்டால் அதில் பூசப்படும் வண்ணப்பூச்சு சிதையாமல் இருக்கும் என்ற பட்டறிவு 2,400 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களுக்கு இருந்திருக்கிறது," என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
தற்போது கார்பன் நானோ குழாய்கள் உருவாக்க மூன்று அல்லது நான்கு வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றுள் மிக உயர் வெப்ப நிலையில் ஒருபொருளை சூடாக்குவதன் மூலம் நானோ குழாய்களை தமிழர்கள் உருவாக்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் பலரும் கருதுகின்றனர்.
பல ஆண்டுகளுக்குப் பின்பும் கீழடி பானை ஓடுகளில் இருக்கும் கருப்பு வண்ணப்பூச்சு சிதையாமல் இருப்பதற்கு அதன் உறுதித்தன்மைதான் காரணம் என்றும் நானோ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அந்தப் பானைகள் உருவாக்கப்பட்டதால்தான் அவை உறுதியாக உள்ளன என்றும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

