விரைவில் அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், அவரது வருகைக்கு வரவேற்பும் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.
தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் கே.எஸ்.அழகிரி, "தமிழகத்தில் ஆன்மிகம் எடுபடும். ஆனால், அரசியலில் ஆன்மிகம் எடுபடாது. ஆன்மிகம் என்பது குழப்பமான விஷயம். முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்," என்று வலியுறுத்தி உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், "இப்போது எந்தக் கட்சியில் இல்லாத ஒரு புதுக் கொள்கையை ரஜினி அறிவித்துவிடப் போகிறார் என மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
"இருப்பினும் அவரது அரசியல் வருகையை வரவேற்கிறேன். என்ன கொள்கையை, திட்டங்களை அறிவிக்கிறார் எனப் பார்ப்போம்," என்று கூறியுள்ளார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஸ்டாலினின் சகோதரரும் மத்திய முன்னாள் அமைச்சருமான மு.க.அழகிரி ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, "ரஜினி அரசியலுக்கு தாமதமாக வந்தாலும், புதிதாக வந்தாலும் இதன் பாதிப்பு தேர்தலில்தான் தெரியும்.
"ரஜினி கட்சி தொடங்கினால் அது திமுகவையோ, திமுக வாக்கு வங்கியையோ பாதிக்காது," என்று கூறினார்.
"நீட், விவசாயிகள் பிரச்சினைகள் என மக்களுக்கான போராட்டக் களத்தில் இல்லாத ஒருவர் திடீரென தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து அதன்மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பது சாத்தியமில்லாத ஒன்று," என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலை வர் வேல்முருகன் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
"ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அவர் ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என திமுகவைத் தான் சுட்டிக்காட்டியுள்ளார்," என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

