தமிழகத்தின் முன்னாள் முதல்வர்் ஜெயலலிதாவின் நான்காவது நினைவுநாளான இன்று (டிசம்பர் 5) 7 அடி உயரத்தில் அவரது முழு உருவத்தினை பனை ஓலையால் உருவாக்கி பார்வைக்கு வைத்துள்ளார் பனைத் தொழிலாளி ஒருவர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தைச் சேர்ந்த பனையேறும் தொழிலாளி பால்பாண்டி. பனை ஓலையால் வித்தியாசமான பல பொருள்களைச் செய்து காட்சிப்படுத்தி வருகிறார்.
பெருந்தலைவர் காமராஜர், அப்துல்கலாம், தாஜ்மகால், கோபுரம், வில்வண்டி, மாட்டு வண்டி, குழந்தைகள், பனைதொழிலாளி என சுமார் 100க்கும் மேற்பட்ட பொருள்களைப் பனை ஓலையால் செய்து அசத்தியுள்ளார். இதை அவரது வீட்டில் பார்வைக்கும் வைத்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு 7 அடி உயரத்தில் ஜெயலலிதாவின் உருவத்தைப் பனை ஓலையால் முழுமையாக உருவாக்கி உள்ளார். இதனை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
ஜெயலலிதாவின் உருவத்தை பனை ஓலையில் செய்ய வேண்டும் என பல நாட்களாக எண்ணி வந்ததாகவும் அது இப்போதுதான் நிறைவேறி உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
6 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார்.


