சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக்கொடியுடன் நேற்று போராட்டக்களத்தில் குதித்தனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவசாயிகளுக்கும் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நலன்களுக்கும் ஆதரவு தரும் வகையில் போராட்டம் நடத்தப் படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக முன்னணித் தலைவர்கள் தலைமையில் மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், சேலத்தில் ஸ்டாலின் நடத்திய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கறுப்புக் கொடி ஏந்தி, மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த திமுகவினரை ஆங்காங்கே வழிமறித்து போலிசார் கைது செய்ததாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
ஓமலூர், அயோத்திப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் திமுகவினரை போலிசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
"அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விவசாயிகளின் உரிமை காக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெற்றி காணட்டும்! தமிழகமே கறுப்புக் கடல் ஆகட்டும்! டெல்லி போல குலுங்கட்டும் தமிழகம்," என முன்னதாக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்திருந்தார்.

