விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பெங்களூருக்குச் சென்று தமது மூத்த சகோதரர் சத்யநாராயணாவை நேற்று சந்தித்து ஆசி பெற்றார். இதன் தொடர்பில் இணையத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் வேகமாகப் பரவி வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்து இருந்தார். ஆனால், கட்சி தொடங்காமல் மூன்று ஆண்டுகளைக் கடத்திய இவர், அடுத்த மாதம் கட்சி தொடங்கப்போவதாகவும் இம்மாதம் 31ஆம் தேதி அது குறித்த மேல் விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் டுவிட்டரில் அறிவித்துப் பின்னர் தமது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டும், அனைத்தையும் மாற்ற வேண்டும், இப்போது இல்லைன்னா எப்போதும் இல்லை," என்று இவர் கூறியிருந்தார்.
இந்த முறை ரஜினி தமது பிறந்தநாளை பெங்களூரில் கொண்டாட இருப்பதாகவும் அதனால் போயஸ் கார்டன் வீட்டின் முன் ரசிகர்கள் யாரும் தம்மைப் பார்க்க வர வேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினி ஏன் எதிர்வரும் பிறந்தநாளை சென்னையில் கொண்டாடவில்லை, பெங்களூர் செல்வதற்கான காரணம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழக அரசியல் களத்திலும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அரசியல் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் கூட்டம் பெருமளவில் கூடும் என்பதால் அதைத் தவிர்க்கும் வகையில் ரஜினிகாந்த் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

