தொலைக்காட்சி நடிகை சித்ரா நேற்று அதிகாலை தனது உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெங்களூருவைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் தினேஷ் ராவ் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சித்ரா, சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தனது கணவர் ஹேம்நாத்துடன் தங்கி இருந்துள்ளார்.
விடுதிக்கு இரவு 2.30 மணியளவில் வந்த சித்ரா அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிக்கச் செல்வதாகக் கூறி கணவர் ஹேம்நாத்தை சித்ரா வெளியே அனுப்பியதாகவும் நசரத்பேட்டை போலிசில் ஹேம்நாத் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
சித்ரா-ஹேம்நாத் இருவரும் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி பெற்றோர் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், சித்ராவின் சடலத்தின் புகைப்படங்களை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர் தினேஷ் ராவ், இதுகுறித்து ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், நடிகை சித்ராவின் முகத்தில் இடது பக்கத்தில் நகக் கீறல்கள் ஏற்பட்டது எப்படி? உயிரை மாய்த்துக் கொண்டார் என்றால் கழுத்தில் அடையாளம் இருக்கவேண்டியது அவசியம். கண், மூக்கு, வாய் பகுதியில் காயங்கள் இருந்தால் அது கொலை முயற்சிதான் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, திருமண விஷயத்தில் தனது தோழி தப்பான முடிவை எடுத்துவிட்டதாக சித்ராவின் தோழி நடிகை ரேகா நாயர் கூறியுள்ளார்.
"சித்ராவுக்கு பல சோகங்கள் இருந்தாலும் அதை அவள் சிரிப்பால் மறைத்து வந்தாள்.
"நான் சித்ராவின் நிச்சயதார்த்த போட்டோவை பார்த்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் மூழ்கினேன். சித்ரா திருமணம் செய்துகொண்ட ஹேமந்தை எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு மட்டுமல்ல, சென்னையில் உள்ள பாதிப் பெண்களுக்கு அவனை தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. மதுக் கூடங்களில் பல பெண்களுடன் அவனுக்கு தொடர்பு இருந்தது," என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது மகளின் திடீர் இறப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சித்ராவின் தந்தை காமராஜ், தனது மகளின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை போலிசார் கண்டுபிடிக்க வலியுறுத்தி நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் இடையேயான பிரச்னை தங்களுக்குத் தெரியாது எனவும் சித்ராவின் தந்தை கூறியுள்ளார்.

