சென்னை: தமிழக மக்கள் ஐந்து லட்சம் பேருக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை இலவசமாகப் போடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதற்கான முன்னேற்பாடுகளும் ஆயத்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவா் மேலும் கூறினாா்.
இதுகுறித்து டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தமிழகத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியைப் போடுவதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன.
"அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார மையங்கள், மாநில மருத்துவப் பணிகளுக்கான கழகம் உள்ளிட்ட தமிழகம் எங்கும் உள்ள 2,800 இடங்களில் இரு கோடி தடுப்பு மருந்துகளைப் பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
"அதுமட்டுமல்லாது, முதல்கட்டமாக 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
"மருத்துவா்கள், தாதியா்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்கு முதல்கட்ட தடுப்பூசி வழங்கப்படும்.
"இதையடுத்து 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் 50 வயதுக்கு குறைவான இதர நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படும். இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கும் இந்தத் தடுப்பூசியைப் போடத் திட்டமிட்டுள்ளோம்.
"இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள், அறிவுறுத்தலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்," என்றாா் அவா்.
கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டாலும் பொது மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் மிக வும் முக்கியம் என்றும் ராதாகிருஷ்ணன் சொல்லியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி குறைந்த விலையில் வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில், இந்த தடுப்பூசி எந்தவித கட்டணமும் பெறாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவச மாகப் போடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளதாக கடந்த 6ஆம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.

