தமிழக சிபிஐ பாதுகாப்பில் இருந்து 103 கிலோ தங்கம் மாயம்; சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

2 mins read
c1f64cb7-bf2f-4cfc-88ba-b69ff9d2b77d
படம்: தமிழக ஊடகம் -

சென்னையில் சிபிஐ பாதுகாப்பில் இருந்து 103 கிலோ தங்கம் மாயமாகியுள்ளது. அதன் தொடர்பில் சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்தினால், சிபிஐயின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படும்," என்ற சிபிஐ-யின் வாதத்தை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் ஏற்க மறுத்துவிட்டார்.

சிபிசிஐடி போலிசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி, சிபிஐ குற்றமிழைத்திருந்தால், அதற்கான பின்விளைவுகளைச் சந்தித்துதான் ஆக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்தியக் கனிமங்கள் மற்றும் உலோக வர்த்தகக் கழக (MMTC) அதிகாரிகள், சென்னையைச் சேர்ந்த சுரானா நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் துணைபோவதாகப் புகார் எழுந்தது.

வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெள்ளி போன்றவற்றை இறக்குமதி செய்யும் தொழிலில் சுரானா நிறுவனம் ஈடுபட்டு வந்தது.

இதையடுத்து, கடந்த 2012ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கக் கட்டிகள், நகைகள் உள்பட 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 2015ஆம் ஆண்டு விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ, `குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரமில்லை' என்று தெரிவித்தது.

இதை அப்போது ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சுரானா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குத் தடை விதித்தது.

அதேநேரம், சுரானா நிறுவனம் தங்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.1,160 கோடி அளவுக்கு கடன் தொகையைக் கட்டாமல் இருப்பதாக எஸ்பிஐ வங்கி, அதற்கெதிரான நடவடிக்கைகளைத் தொடங்கியது.

கடந்த 2019 டிசம்பரில் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம், எஸ்பிஐ வங்கியின் முறையீட்டின் பேரில், இதில் தலையிட்டது. சிபிஐ வசமிருக்கும் பறிமுதல் தங்கத்தை, சுரானா நிறுவனம் கடன் நிலுவைத் தொகை செலுத்த வேண்டிய ஆறு வங்கிகளிடம் பிரித்துக் கொடுக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

வங்கி அதிகாரிகள் முன்னிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பாதுகாப்புப் பெட்டகங்களைத் திறந்து சிபிஐ சோதனையிட்டது.

தங்கக் கட்டிகள், நகைகளை எடை பரிசோதனை செய்தபோது 103.864 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிபிசிஐடியில் எஸ்.பி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி ஒருவர், வழக்கு விசாரணையை ஆறு மாதத்துக்குள் முடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்