மதுரையில் இன்று பிரசாரத்தைத் தொடங்கும் கமல்

மதுரையில் இன்று பிரசாரத்தைத் தொடங்கும் கமல்

2 mins read
f8c0a985-641e-4c63-a570-43cddd0a66bb
கமல். படம்: ஊடகம் -

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் 'தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்,' என்கிற முழக்கத்துடன் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்.

'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் இன்று முதல் கமல் ஹாசனின் முதல்கட்ட பிரசாரம் மதுரையில் தொடங்குகிறது.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற கமல் ஹாசன், மதுரையில் 4 இடங்களில் நடைபெறும் கூட்டத்தில் பேச உள்ளார். மேலும் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். மதுரைக்குச் சென்றதும் செய்தியாளர்களையும் சந்தித்தார் கமல். நாளை காலை மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் திறந்த வேனில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார்.

திண்டுக்கல், தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு திறந்த வேனிலேயே செல்லும் கமல் ஹாசன் குறிப்பிட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்களில் மக்கள் மத்தியில் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

15ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும், 16ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலும் கமல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

கமல் வருகையையொட்டி மக்கள் நிதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிரச்சாரத்திற்காக விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதற்கிடையே, இந்தியாவின் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்துக்கு பிரதமர் மோடி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டதைக் குறிப்பிட்டு, "கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக் காக்க?" என்று தமது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் கமல்.

இந்தப் பதிவில் பிரதமர் மோடியை 'டேக்' செய்ய முடியுமா என இன்று மதுரையில் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "மறுபடியும் டேக் செய்துவிட்டால் போகிறது," என்று பதிலளித்தார் கமல்.

குறிப்புச் சொற்கள்