மரண கணவாய் சாலையில் 15 வாகனங்களை மோதித்தள்ளிய லாரி: நால்வர் பலி; பலர் காயம்

மரண கணவாய் சாலையில் 15 வாகனங்களை மோதித்தள்ளிய லாரி: நால்வர் பலி; பலர் காயம்

1 mins read
be71d41f-c00a-426c-8239-ce025857fcb3
ஆந்திராவில் இருந்து வந்த ஒரு கொள்கலன் சிமெண்ட் லாரி, சாலையில் நின்றிருந்த 15 வாகனங்களை மோதித் தள்ளியதில் பல வாகனங்களும் ஒன்றன் மேல் ஒன்று கவிழ்ந்து ஒன்றும் புரியாத நிலை ஏற்பட்டது. மீட்புப் பணிகள் மிகவும் சிரமமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். படம்: இந்திய ஊடகம் -

தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர் கணவாய் அருகே சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று 15 வாகனங்கள் மீது ஒரு லாரி மோதிய விபத்தில் நால்வர் கொல்லப்பட்டனர். 15 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

விபத்தில் சிக்கிய இரு லாரிகளை சாலையை விட்டு அகற்ற போலிசார் முயன்றுகொண்டு இருந்த போது ஆந்திராவிலிருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி வந்த கொள்கலன் லாரி, சாலையில் காத்திருந்த வாகனங்களை மோதித் தள்ளியது.

விபத்தில் சிக்கியவர்களை போலிஸ் மீட்டது. அவர்களில் நால்வர் அங்கேயே மரணமடைந்துவிட்டனர். காட்டுக்குள் தப்பி ஓடிய சிமெண்ட் லாரி ஓட்டுநர் பிறகு போலிசாரிடம் சிக்கினார்.

விபத்து நிகழ்ந்த தொப்பூர் கணவாய்ச் சாலைப் பகுதியை மரண சாலை என்று லாரி ஓட்டுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்தப் பகுதியில் கடந்த 10 மாதங்களில் சாலை விபத்துகளில் 36 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள்.

இதனிடையே, சிமெண்ட் லாரி விபத்து நிகழ்ந்த இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்திய அமைச்சர் அன்பழகன், நெடுஞ்சாலையைச் சீர்செய்து விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி கூறினார்.

விபத்தில் சிக்கிய அனைத்து வாகனங்களையும் அகற்றி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளை உடனிருந்து அமைச்சரும் அதிகாரிகளும் முடுக்கிவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்
விபத்து