நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியின் கொள்கை தமக்கு ஒத்துப்போனால் அவருடன் இணைந்து ஒன்றாக தேர்தலைச் சந்திக்கத் தயார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் கமல்ஹாசன் பிரசாரப் பயணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் தொடங்கி விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து வருகிறார்.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் மீனவர்கள் நிறைந்த பகுதியில் மழையிலும் கையசைத்த அவர், மீனவர்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய கமல், "ஊழல் குற்றச்சாட்டு அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. மதத்தால், சாதியால், பன்முகத்தன்மையால் ஒடுக்க நினைப்பவர்களுக்கு தமிழகம் தக்க பதிலடி கொடுக்கும்.
"நாங்கள் செயலில் இறங்க வேண்டிய நேரம் இது," என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.
ரஜினிகாந்த் பற்றி குறிப்பிட்ட அவர், "புதிதாகக் கட்சி தொடங்கி வருபவர்கள் ஒரு காரணத்துக்காக வருகிறார்கள். நான் கட்சி தொடங்கிய காரணம் என்னவென்று சொல்லிவிட்டேன்.
"கண்டிப்பாக ஒரு மாற்றம் வேண்டும். நண்பர் ரஜினியும் அதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இன்னும் தங்களது கொள்கை என்னவென்று அவர்கள் தெளிவாகச் சொல்லவில்லை. ஒற்றை வார்த்தையில் சொல்வதை முழுக்கொள்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது. சொல்லட்டும். பிறகு நாங்கள் பேசுவோம்.
"எங்களுக்குள் நட்பு என்பது ஒருவருக்கு ஒருவர் ஒரு தொலைபேசி அழைப்பில் தொடர்புகொள்ளக் கூடிய வகையில் மிகவும் எளிதானது. அதில் எங்களுக்குள் உதவி செய்ய முடிந்தால் உதவி செய்வோம்.
தொடர்புடைய செய்திகள்
"கொள்கைப்படியும் மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் எந்த 'ஈகோ'வையும் விட்டுக் கொடுத்து விட்டு நாங்கள் ஒத்துழைப்போம்," என்று தெளிவுபடுத்தினார்.
ஆனால் ரஜினி, கமல் இருவருக்குள்ளும் இருக்கும் அடிப்படை வித்தியாசங்கள் இருவரையும் ஒன்றிணைக்குமா என்பது சந்தேகம்தான் என்று அரசியல் விமர்சகர் ப்ரியன், தனியார் தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.
"கட்சி தொடங்கியதும் கமல்ஹாசன் யாரைச் சந்தித்தார்.
"பிரதமர் மோடிக்கு எதிராக அரசியல் களத்தில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரைச் சந்தித்ததோடு இன்று வரை அவர்களுடன் நட்பில் உள்ளார்.
"ஆனால் ரஜினி, மோடிக்கும் பாஜகவுக்கும் எதிரானவர் அல்ல. இதிலிருந்து முரண்பாடு தொடங்குகிறது. ஒருவேளை ரஜினியுடன் கமல் கூட்டணி அமைத்தால் ரஜினி யின் கட்சி வேட்பாளருக்காக அவர் 'ஈகோ' இன்றி வேலை செய்வாரா அல்லது முதல்வர் வேட்பாளராக கமலை ரஜினி அறிவிப்பாரா என்ற சந்தேகங்களும் உள்ளன," என்றார் திரு ப்ரியன்.
ஆன்மிக அரசியலுடன் நாத்திகம் சேரும் வாய்ப்பு குறைவும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.


