சென்னை காசிமேடு துறைமுகத்தில் விசைப்படகு ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, அதிலிருந்த ஒன்பது மீனவர்கள் கடலுக்குள் குதித்து, நீந்தி கரையேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த தீவிபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள விசைப்படகு எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது.
அத்துடன், படகிலிருந்த மீன்பிடி உபகரணங்களும் எரிந்து சாம்பலாகின.
காசிமேடு மீன்பிடி துறைமுகப் போலிசாரின் விசாரணையில், தீயில் எரிந்த விசைப்படகு சில நாள்களாக கரையில் நிறுத்தப்பட்டு பழுதுபார்க்கப்பட்டு வந்ததும் நேற்றுமுன்தினம் மீண்டும் கடலுக்குள் கொண்டுசென்றபோது இந்த விபத்து நேர்ந்ததும் தெரியவந்தது.
காசிமேடு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வது வழக்கம்.
இதுபோல், காசிமேடு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பரிமளா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்றபோதுதான் இந்த விபத்து நேர்ந்தது.
ஆழ்கடலுக்குச் சென்று கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக படகிலேயே தங்கியிருந்து மீன்பிடித்து வருவதாக அவர்கள் திட்டமிட்டிருந்ததால், 6,500 லிட்டர் டீசல், போதுமான உணவுப் பொருட்கள், ஐஸ், மீன்பிடி சாதனங்களை ஏற்றிக்கொண்டு நேற்றுமுன்தினம் காலை கடலுக்குள் செல்ல விசைப் படகின் இயந்திரத்தை இயக்கியபோது அதிலிருந்து தீப்பற்றியதாக தெரிகிறது.
இதையடுத்து, விசைப்படகில் வைத்திருந்த டீசல் டேங்க், வலை உள்ளிட்ட பொருட்களிலும் தீ பரவியது. ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் 2 மணி நேரமாகப் போராடி விசைப் படகில் எரிந்த தீயை அணைத்தனர்.

