கட்சியின் தொடக்க விழாவை மதுரையில் நடத்த ரஜினி திட்டமிடுவதாகத் தகவல்

கட்சியின் தொடக்க விழாவை மதுரையில் நடத்த ரஜினி திட்டமிடுவதாகத் தகவல்

1 mins read
709d3008-5837-4c7d-a874-8912a1a61dbd
படம்: ஊடகம் -

தனது புதிய கட்சியின் தொடக்க விழாவை மதுரையில் நடத்த நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். கட்சி தொடங்கும் தேதி, இடம் குறித்து வரும் 31-ம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரைப் பதிவு செய்வது, சின்னம் பெறுவது உள்ளிட்ட பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், கட்சி தொடக்க விழா பொதுக்கூட்டத்தை எங்கு, எப்போது நடத்துவது என்று கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி மற்றும் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை நடத்தியுள்ளார்.

விழாவுக்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய நகரங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

தற்போது தனக்கு அதிக ரசிகர்கள் உள்ள மதுரையில் கட்சி தொடக்க விழா பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் கட்சியின் பெயர், சின்னம், தேர்தல் பிரச்சார பயண திட்டம், கட்சியின் கொள்கை ஆகியவற்றை ரஜினிகாந்த் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டப்பேரவைக்கு மார்ச் மாதத்திலேயே தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், பொங்கலுக்குப் பிறகு அதாவது, கட்சியைத் தொடங்கி, அங்கேயே தேர்தல் பிரசாரத்தையும் ஆரம்பிக்க ரஜினி முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்புச் சொற்கள்