சென்னை: தன்னைத் திட்டவும் அணைத்துக் கொள்ளவும் விமர்சிக்கவும் கமல்ஹாசனுக்கு எல்லா உரிமையும் உள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை மட்டுமன்றி தமிழகம் முழுவதும் பாஜக மிகப்பெரிய சக்தியாக வேரூன்றி வருகிறது. மக்கள் ஆதரவும் வலுத்து வருவ தாக சென்னையில் பாஜகவுக்கு ஆதரவு திரட்டிய குஷ்பு கூறினார்.
குஷ்பு செய்தியாளர்களிடம் பேசியபோது, "சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு என்னை பொறுப்பாளராக நியமித்துள்ளனர். எனவே எனது பணியை செய்து கொண்டிருக்கிறேன். இத்தொகுதியில் யார் வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார் என்பது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்," என்று கூறினார்.
வேளாண் சட்டங்கள் குறித்து குஷ்புக்கு ஒன்றுமே தெரியாது என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளாரே என்று தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கமல்ஹாசன் எனது நல்ல நண்பர். என்னைத் திட்டலாம், என்னை அணைத்துக் கொள்ளலாம், என்னைப் பற்றி எதை வேண்டு மானாலும் சொல்லலாம். கமல்ஹாசனுக்கு அந்த உரிமை இருக்கிறது. "அரசியல் களத்தில் நெருங்கிய நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை,'' என்று எனது அரசியல் ஆசான் கருணாநிதி எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு திமுகவுக்கு எதிராகவே நான் பேசுகிறேன். ஏனெனில் கருணாநிதி மாதிரி ஒரு தலைவர் இல்லை. இப்போதுள்ள திமுகவுக்கும் கருணாநிதி காலத்தில் இருந்த திமுகவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது," என்று குஷ்பு பதிலளித்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக பாஜக மீனவரணி சார்பில் சென்னை மெரினா நடுக்குப்பம் மீனவப் பெண்களுக்கு அலுமினிய மீன்கூடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பாஜக பொறுப்பாளர் குஷ்பு கலந்துகொண்டு மீனவப் பெண்களுக்கு மீன்கூடை, மீன்களை வழங்கினார். படம்: ஊடகம்

