சுவரொட்டி, கூட்டங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளைப் போல் சட்டம் தேவை என குரல்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. கொவிட்-19 கிருமி காரணமாக தேர்தல் பிரசாரத்தில் சமூக வலைத்தளங்களின் பங்கு பெரிதும் கூடிவருகிறது. பல்வேறு கட்சிகளும் தகவல் தொழில்நுட்பக் குழுக்களை அமைத்து இணையப் பிரசாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கட்சிகளின் சமூக வலைத்தளங்களில் அனாமதேய முகவரிகளில் பதிவுகள் வரம்பு கடப்பதாகவும் அவற்றில் பெரும்பாலானவை வதந்திகளாக இருப்பதாகவும் கட்சிகளும் மக்களும் தெரிவிக்கிறார்கள்.
இதனால் மிரட்டல், தேவையில்லாத சச்சரவுகள் தலைதூக்குவதாகக் குறிப்பிடும் அவர்கள், சுவரொட்டிகள், பதாகைகள், பொதுக் கூட்டங்களுக்குத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதைப் போல இணையத் தேர்தல் பிரசாரத்திற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் தேவையென கூறுகிறார்கள்.
இணையத்தில் ஒவ்வொரு கட்சியும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு பெயர்களில் கணக்குகளைத் தொடங்கி தங்கள் அரசியல் எதிரிகளைக் கேலிக்கூத்தாகச் சித்திரிக்கின்றன.
கட்சித் தலைவர்கள் எப்போதோ பேசிய காணொளிகளை வெட்டியும் ஒட்டியும் திருத்தம் செய்தும் பதிவேற்றி வரம்பு மீறி அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.
இப்படிச் செய்வதன் மூலம் ஒரு கட்சியின் பெயரைக் கெடுக்கவும் நடுநிலை வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கவும் முடியும் என்று கட்சிகள் நம்புவதாக கவனிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
"ஒன்றையொன்று விமர்சிக்கும் போக்கு எல்லை கடந்துவிட்டது. சில நேரங்களில் இவற்றைச் சகித்துக்கொள்ள முடியவில்லை," என்று சமூக ஆர்வலர்களும் நடுநிலை வாக்காளர்களும் கவலை தெரிவிக்கிறார்கள்.
"இந்திய தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தலுக்குப் பல கட்டுப்பாடுகளை அண்மைய காலமாக விதித்துள்ளது. வாகன கட்டுப்பாடு, பிரசார நேரத்திற்கான கட்டுப்பாடு ஆகியவையும் அவற்றில் அடங்கும்.
"இதன் காரணமாக நாளும் பொழுதும் 24 மணி நேரமும் திறந்தவெளியாகவே இருக்கும் இணையத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தொண்டர்களும் கண்டபடி கருத்து களைப் பதிவேற்றி வர தொடங்கி இருக்கிறார்கள்.
"இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அரசியல் நாகரிகம் காக்கப்படவேண்டும்," என்றும் அவர்கள் கோருகிறார்கள்.
"நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் கொவிட்-19 காரணமாக அதிகம் இணையத்தைச் சார்ந்து இருக்கும். இதை உணர்ந்து அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.
"இதனால் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் அவசியம்," என்று அவர்கள் வலியுறுத்தினர்.

