சென்னை: சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் பரபரப்பும் வியப்பும் அதிகரிக்கும் வகையில் புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. தங்கம் எதுவும் காணாமல் போகவில்லை என்றும் அதை எடை போட்டு பதிந்தபோது தவறு ஏற்பட்டுவிட்டதாகவும் சிபிஐ இப்போது தெரிவித்துள்ளது.
சென்னை பாரிமுனையில் செயல்படும் தனியார் தங்க ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அந்தத் தனியார் நிறுவனத்தில் 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், அதே நிறுவனத்தில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டு பூட்டப்பட்டது. அந்தப் பெட்டகத்தின் சாவிகள் சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் குறிப்பிட்ட பெட்டகத்தைத் திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டு இருந்த 400.47 கிலோ தங்கத்தில் 103.864 கிலோ தங்கம் மாயமாகிவிட்டது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதை அடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, மாயமான 103 கிலோ தங்கம் பற்றி புதுடெல்லி சிபிஐ போலிசும் தனியாக களத்தில் இறங்கி விசாரணையைத் தொடங்கியது. இந்த விசாரணை இப்போது தொடர்கிறது.
தங்கத்தை மொத்தமாக எடை போட்டதாகவும் அந்த எடையை ஆவணங்களில் எழுதும்போது மாற்றி எழுதிவிட்டதாகவும் சிபிஐ விசாரணையில் இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் 400.47 கிலோ தங்கத்தில் இப்போது 296 கிலோ மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த எடை மாற்றி எழுதப்பட்டது என்பது குறித்து முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சிபிஐ விசாரணையில் இப்படி எனில், சிபிசிஐடி விசாரணையில் என்ன தெரியவரும் என்பது தெரியாததால் பரபரப்பும் வியப்புகளும் இதில் கூடி வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன.
கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக போலிசும் இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது.

