கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்தடுத்து தளர்த்தப்பட்டு வரும் நிலையில் சுற்றுலாத் தலங்களில் கூடும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் கொடைக்கானல், மாமல்லபுரம், குற்றாலம், ஏற்காடு, ஊட்டி உள்ளிட்ட பகுதிகள் களைகட்டி வருகின்றன.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுற்றுலாத் தலங்களில் உள்ள தங்கு விடுதிகளில் அறை முன்பதிவுகள் அதிகரித்திருப்பதாகவும் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிப் போயின. இதனால் தங்கு விடுதிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தன.
கோடை கால விடுமுறையில் சுற்றுலாத் தலங்களில் அதிகமானோர் கூடுவதால், சாலையோர வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் இந்தாண்டு கோடைக்காலம் முழுவதும் ஊரடங்கிலேயே கழிந்தது.
இந்நிலையில் ஊரடங்கு விலக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் அடுத்தடுத்து அறிவிக்கப்படுவதால் ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிறு கடைகள், உணவகங்கள் வைத்திருப்போரும் தங்கு விடுதி உரிமையாளர்களும் 9 மாதங்களுக்குப் பிறகு உற்சாகமடைந்துள்ளனர்.
கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளைக் காண முடிந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மாமல்லபுரம் வந்திருப்பதாக சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவித்தனர்.

