வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அறிவித்துள்ள மத்திய அரசு, நாட்டில் விளையும் அனைத்து வகையான வெங்காயத்தையும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏற்றுமதி செய்வதற்கும் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு உத்தரவு, தென்மேற்கு பருவமழை ஆகியவற்றால் இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி கடுமையான முறை யில் பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உச்சம் தொட்டது.
தமிழகத்திலும் ஒரு கிலோ சின்ன, பெரிய வெங்காயம் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கும் நிலை ஏற்பட்டது. இதேபோல் நாடெங்கும் மேலும் பல மாநிலங்களிலும் வெங்காயத்தின் விலை உயா்ந்தது.
வெங்காயத்தில் பெரும் லாபம் பார்க்க அதை பதுக்கியவர்கள் மீதும் ஆங்காங்கே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வெங்காயத்தின் உச்சம் தொடும் விலையுயர்வு பொதுமக்களை கண்ணீர் விட வைத்துள்ளதாகவும் சில ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் முதல் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தவும் நாட்டில் மேலும் வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கவும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில், இப்போது அந்தத் தடை நீக்கப்படுவதாக வெளிநாட்டு வா்த்தகத்துக்கான இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் உள்நாட்டில் வெங்காய விலை அதிகரிக்கும்போது அதனை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
இதற்கிடையே, பல்வேறு மாநிலங்களிலும் வெங்காயம், உருளைக்கிழங்கு அறுவடை தற்போது துவங்கியுள்ளதன் எதிரொலியாக, வெங்காயம், உருளைக்கிழங்கின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா மாநிலங்களில் இருந்து சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு அவற்றின் வரத்து அதிகரித்துள்ளதால், வெங்காயம் மொத்த விலையில் கிலோ 25 முதல் 30 ரூபாய் வரை; உருளைக்கிழங்கு 20 முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெங்காயம், உருளைக்கிழங்கு விலை குறைந்து வருவதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

