தமிழகத்தில் நாளை தடுப்பூசி ஒத்திகை; சென்னையில் 3 இடங்கள் தேர்வு

தமிழகத்தில் நாளை தடுப்பூசி ஒத்திகை; சென்னையில் 3 இடங்கள் தேர்வு

2 mins read
94c61282-5cd4-4437-89e7-e21a1f9ee805
படம்: தமிழக ஊடகம் -

உலகின் சில நாடுகளில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் தடுப்பூசி போடுவது தொடர்பிலான ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது.

சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், 50 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்கள் என 30 கோடி பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஓரிரு நாளில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அரசின் ஒப்புதல் கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளது.

பஞ்சாப், அசாம், ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகைகள் நடத்தப்பட உள்ளன.

மாநிலத் தலைநகரங்களில் குறைந்தது 3 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றை மாநில அரசுகள் தேர்வு செய்துள்ளன.

தடுப்பூசி போட வருபவர்களுக்கான இட வசதி, மருந்துகளை வைப்பதற்கு தேவையான இட வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நாளை சரிபார்க்கப்படும்.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் 25 பணியாளர்களை ஊசி போட வரவழைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் பற்றி இதில் ஆய்வு செய்யப்படும்.

தமிழ்நாடு முழுவதும் முதல் கட்டமாக 5 லட்சம் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு சுகாதாரத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட தடுப்பூசி சேமிப்பு மற்றும் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி செலுத்துவதற்கு 21,000 தாதியருக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் 11 இடங்களில் தடுப்பூசி போடுவதற்கு மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் நாளை ஒத்திகை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு தலைமை பொது மருத்துவமனை, சாந்தோமில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஈக்காட்டுத் தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்