கோவை: இளம் இந்தியர்கள் (Young Indians) என்ற அமைப்பு ஆண்டுதோறும் 'கோயம்புத்தூர் விழா' என்ற ஒரு விழாவை நடத்தி வருகிறது. 13வது ஆண்டாக இந்த ஆண்டு இந்த விழா ஜனவரி 2 முதல் ஜனவரி 10 வரை நடக்கிறது.
கொவிட்-19 காரணமாக பல நிகழ்ச்சிகளும் இணையம் வழி நடத்தப்படுகின்றன. என்றாலும் மெதுவோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நேரடியாக இடம்பெறுகின்றன. முதல் நாளான சனிக்கிழமை கொவிட்-19 முன்களப் பணியாளர்களுக்கு நன்றி கூறும் வகையில் ஹெலிகாப்டர்கள் அவர்களை இலவசமாக ஏற்றிச் சென்றன.
கோயம்புத்தூரில் இருக்கும் இரண்டு முக்கியமான மருத்துவமனைகளுக்கு உயரே ஹெலிகாப்டர்கள் பறந்து பூமழை பொழிந்து முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தன.
கோவையைப் போற்றி கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் இந்த விழா நடக்கிறது. கொவிட்-19 கிருமியை கோயம்புத்தூர் வெற்றிகரமாக வீழ்த்தி இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

