தமிழக காங்கிரசை நிர்வகிக்க 400 பேர்; இன்னமும் மனக்குமுறல், புகார், முணுமுணுப்பு

தமிழக காங்கிரசை நிர்வகிக்க 400 பேர்; இன்னமும் மனக்குமுறல், புகார், முணுமுணுப்பு

2 mins read

சென்னை: உள் கட்­சிக் குழப்­பங்­களுக்கு, கோஷ்டி மோதல்­க­ளுக்குப் பெயர்போன தமி­ழக காங்­கிரஸ் கட்­சி­யி­னர் எல்­லா­ரும் சேர்ந்து ஒற்று­மை­யாக நிர்­வ­கித்து கட்­சி­யை நடத்த ஏது­வாக ஏகப்­பட்­ட­வர்­களுக்குப் பத­வி­கள் கொடுக்கப்­பட்டு இருக்­கின்­றன.

இருந்­தா­லும் அந்­தக் கட்­சி­யில் இன்­ன­மும் குறை­கூ­றல்­களும் புகார்­களும் முணுமு­ணுப்­பு­களும் ஓய்ந்­த­பா­டில்லை என்று கூறப்ப­டு­கிறது.

கட்­சித் துணைத் தலை­வர் பத­விக்கு 32 பேர் நிய­மிக்­கப்­பட்டுள்­ள­னர். பொதுச் செய­லர் பத­விக்கு 57 பேரும் செய­லர் பத­விக்கு 104 பேரும் என புதிய நிர்­வா­கி­க­ளாக 400க்கும் மேற்­பட்­டோர் நிய­மிக்­கப்­பட்டு இருக்கிறார்கள்.

ஆனா­லும் பதவி கிடைக்­காத கோபத்­தில், 'இத­னால், எந்த பய­னும் இல்லை; அதி­கா­ர­மும் இல்லை' என கார்த்தி சிதம்­ப­ரம் உள்­ளிட்ட சிலர் மனக்­கொ­திப்பை வெளிப்­படுத்தி புகார் தெரி­வித்து வரு­வ­தாகத் தக­வல்­கள் கூறுகின்­றன.

தமி­ழக காங்­கி­ரஸ் கட்­சிக்­குப் புதிய நிர்­வா­கி­களை நிய­மிக்க வேண்­டும் என்ற கோரிக்கை நீண்ட கால­மாக இருந்து வந்­தது. ஞான­தே­சி­கன் தலை­வ­ராக இருந்­த­போது நிய­மிக்­கப்­பட்ட நிர்­வா­கி­களே இப்­போ­தும் நீடிக்­கின்­ற­னர்.

இடை­யில் இளங்­கோ­வன், திரு­நா­வுக்­க­ர­சர் இரு­வ­ரும் தலை­வர்­க­ளாக வந்து சென்றுவிட்­ட­னர்.

தமி­ழக காங்­கி­ரஸ் தலை­வ­ராக இப்­போது பொறுப்பு வகிக்­கும் அழகிரி, தனக்­குரிய நிர்­வாகக் கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்த தீவிர முயற்சி எடுத்­தார். அதன் பல­னாக 400க்கும் மேற்­பட்ட நிர்­வா­கி­கள் அடங்­கிய பட்­டி­ய­லை காங்­கி­ரஸ் மேலி­டம் அங்கீகரித்துள்ளது.

என்­றா­லும் துணைத் தலை­வர், பொதுச்­செ­ய­லர் உள்­ளிட்ட மாநில நிர்­வா­கி­கள் பட்­டி­ய­லில் முன்­னாள் நிதி அமைச்­ச­ரின் புதல்­வ­ரும் நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கார்த்தி சிதம்­ப­ரத்­துக்கு இடமில்லை.

இத­னால், கோபம் அடைந்த அவர், தன் எதிர்ப்பை டுவிட்­டர் பக்­கத்­தில் காட்­டி­யுள்­ளார்.

"இவ்­வ­ளவு பெரிய குழு­வால் எந்த பய­னு­மில்லை. 32 துணைத் தலை­வர்­கள், 57 பொதுச் செய­லர்­கள், 104 செய­லர்­கள் என நிய­மிக்­கப்­பட்ட யாருக்­கும் எந்த அதி­கா­ர­மும் இருக்­காது. அதி­கா­ரம் இல்­லா­த­தால் யாருக்­கும் பொறுப்பு என்­ப­தும் இருக்­காது," என்று அவர் புகார் தெரி­வித்­தார்.

காங்கி­ரஸ் மேலி­டத்­தின் ஒப்பு­தலு­டன் அகில இந்­திய காங்­கி­ரஸ் பொதுச்­செ­ய­லர் வெளி­யிட்ட பட்டி­ய­லுக்கு கார்த்தி சிதம்­ப­ரம் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­தால் காங்­கி­ர­சில் சர்ச்சை தொடர்­கிறது.