தமிழ்மொழியையும் தமிழ்க் கலாசாரத்தையும் பரப்புவதற்காக டெல்லி அரசாங்கம் புதிய பயிலகம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறது. யூனியன் பிரதேசமான டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கிறது. அதன் கலை, கலாசார, மொழி அமைச்சு, தமிழ்மொழியையும் கலாசாரத்தையும் பரப்ப பயிலகம் ஒன்றை அமைத்துள்ளது. அப்புதிய பயிலகத்திற்கு விரைவில் அலுவலக இடம் ஒதுக்கப்படும் என்றும் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் டெல்லி அரசாங்கம் நேற்று முன்தினம் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பயிலகத்தின் தலைவராக இருப்பார். முன்னாள் மாநகராட்சி உறுப்பினரும் டெல்லி தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினருமான என்.ராஜா பயிலகத்தின் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்துக் கருத்துரைத்த திரு ராஜா, "டெல்லியில் தமிழுக்குப் பயிலகம் அமைக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. அதில் நானும் ஓர் அங்கமாக இருக்கப்போவதைப் பெரும் கௌரவமாகக் கருதுகிறேன். இந்திய வரலாற்றிலும் டெல்லியிலும் தமிழ்மொழியும் கலாசாரமும் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது," என்றார்.
"கலாசாரச் செழுமைமிக்க நகரம் டெல்லி. நாட்டின் எல்லாப் பகுதிகளையும் சேர்ந்தவர்கள் இங்கு வாழ்கின்றனர், வேலை செய்கின்றனர். இந்தப் பன்முகத்தன்மைதான் டெல்லியை உயிர்ப்புடன் வைத்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இங்கு இருக்கின்றனர். தங்கள் சொந்த மாநிலத்தின் கலை, கலாசாரத்தை அனுபவிக்க அவர்களுக்கு ஒரு தளம் அமைத்துத் தர விரும்புகிறோம்," என்று திரு சிசோடியா கூறியுள்ளார்.
தமிழ்மொழியையும் கலாசாரத்தையும் பரப்புவதில் சிறப்பாகப் பணியாற்றியவர்களைப் பாராட்டும் விதமாக பல விருதுகளை வழங்கவும் டெல்லி கலை, கலாசார, மொழி அமைச்சு முடிவுசெய்து இருக்கிறது.=அத்துடன், அப்பயிலகம் வாயிலாக தமிழ்மொழிப் பாடப்பரிவுகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. மேலும், தமிழக மக்களுக்காக கலாசார விழாக்களுக்கும் ஏற்பாடு செய்யப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
.

