தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றுமுதல் மேலும் ஐந்து நாள்களுக்கு இந்த கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரிலும் நேற்று காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஏறக்குறைய 5,000 கனஅடி உபரி நீரை அதிகாரிகள் திறந்து விட்டுள்ளனர்.
இதனால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் சென்னை மீண்டும் வெள்ளக்காடாகக் காட்சி அளித்தது.
சில இடங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இயந்திரங்களைக் கொண்டு மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்றவேண்டும் என்றும் கால்வாய்களைச் சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக பொதுமக்கள் இந்த மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 12ஆம் தேதி வரை தமிழ கத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்மழை காரணமாக இதுவரை 4,266 ஏரிகள் நிரம்பியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த 1915ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜனவரி மாதத்தில் நேற்று முன்தினம்தான் அதிகளவு மழை பெய்துள்ளது என்றும் 105 ஆண்டு களுக்குப் பிறகு சென்னையில் அதிகளவில் மழை பதிவாகியுள்ளது என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக சாலைகள், பேருந்து நிலை யங்களில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதைக் கடந்து செல்கின்றனர் பயணிகள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக பொதுமக்கள் இந்த மழை வெள்ளத்தால் கடு மையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
படம்: ஏஎஃப்பி

