தமிழகத் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
அரசியலுக்கு வருவது உறுதி என சூளுரைத்திருந்த ரஜினி, தமக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி அண்மையில் அரசியலுக்கு முழுக்கு போட்டார். இது அவரது ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது.
தாம் எடுத்துள்ள இந்த முடிவு தமது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தரும் என்று தமக்குத் தெரியும் என்று கூறிய ரஜினிகாந்த், அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
தமது முடிவை ஏற்றுக்கொள்ளும்படி அவர் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் ரஜினிகாந்தை அரசியலுக்கு வர வலியுறுத்தி, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று அவரது ரசிகர்கள் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தமிழகத்தைக் காக்க ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் முழக்கமிட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல ரஜினி ரசிகர்கள் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கூடியதாக தமிழக ஊடகம் தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும் இதுதொடர்பான செய்திகள் வலம் வந்தன. தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு கட்சி தொடங்கினாலும் ரஜினிகாந்த் தமிழக முதல்வராவது உறுதி என்று ரசிகர்கள் கூறினர்.

