வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. எதிர்வரும் 15ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது. மத்திய அரசுடன் பலமுறை பேச்சு நடத்தியும் அவர்களின் கோரிக்கைகள் இதுவரை ஏற்கப்படவில்லை.
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன் கருதியே அமல்படுத்தப்படுவதாகவும் அவற்றை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நிலவும் கடுங்குளிர், கனமழைக்கு மத்தியில் விவசாயிகள் சாலைகளிலேயே கூடாரம் அமைத்து, சமைத்து, அங்கேயே உணவருந்தி, உறங்கி வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், விவசாயிகளில் ஒரு பிரிவினர் வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாக மத்திய அரசு சுட்டிக்காட்டுகிறது.
இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
விவசாயிகளுடன் நிற்பது காங்கிரசின் கடமை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். எதிர்வரும் 15ஆம் தேதியை 'விவசாயிகள் அதிகார தின'மாக காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது என்றார் அவர்.
அன்றைய தினம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைநகரங்களில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்ட ரந்தீப் சுர்ஜேவாலா, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறவும் வலியுறுத்தப்படும் என்றார்.
இதற்கிடையே விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று முன்தினம் மேலும் ஒரு விவசாயி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

