தமிழகத்தில் முதற்கட்டமாக ஆறு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசி போடும் நடவடிக்கையை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்ததும் முதலில் அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தாதியர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும் மருத்துவம் சாரா பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் எனக் குறிப்பிட்டார்.
மூன்று வாரங்களுக்குள் இந்த முதற்கட்ட பணி முடிவடையும் என்றும், மராட்டிய மாநிலம் புனேயில் இருந்து விமானம் மூலம் வரும் தடுப்பூசிகளுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசிகள் வந்தடைந்த உடன், சென்னையில் உள்ள மத்திய அரசின் கிடங்கில் அவை பாதுகாக்கப்படும் என்றும் பின்னர் அங்கிருந்து குளிர்சாதன வசதி உள்ள வாகனங்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதற்காக 51 நடமாடும் குளிர்சாதன வசதி கொண்ட கிடங்குகள் (வாக்கிங் கூலர்) பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
"இதற்கு அடுத்த கட்டமாக 2,618 பெரிய மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குளிர்சாதன வசதியுடன் தடுப்பூசிகளை எடுத்துச்செல்லவும், அங்கு சேமித்து வைக்கவும் திட்டம் தயார்நிலையில் உள்ளது. தடுப்பூசி போடுவதற்குத் தேவையான சிறிய அளவிலான குளிர்சாதனப் பெட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
"தடுப்பூசி போடுவதற்காக 28 லட்சம் சிரிஞ்சுகள் மற்றும் ஊசிகள் வரப்பெற்று, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன," என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

