ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட தயாராகும் ஜெயகுமார், குஷ்பு
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சியினர் பலரும் நேரடி சவால் விடுத்து வருகின்றனர்.
அமைச்சர் ஜெயகுமார், நடிகை குஷ்பு ஆகிய இருவரும் இப்பட்டியலில் இணைந்துள்ளனர்.
மு.க.ஸ்டாலினுக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் இடையே தற்போது வார்த்தைப் போர் நடந்து வருகிறது.
அரசின் சாதனைகள் குறித்து விவாதிக்கத் தயாரா என முதல்வர் பழனிசாமி சவால் விடுத்ததை அடுத்து, அதிமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்து விவாதிக்கலாமா என முதல்வருக்கு சவால் விடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
தமிழக ஆளுநரிடம் அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களைப் பட்டியலிட்டு மனு அளித்திருப்பதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், அது குறித்து விவாதிக்க எந்த நேரத்திலும் தாம் தயார் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் ராயபுரம் தொகுதியில் தம்மை எதிர்த்துப் போட்டியிட ஸ்டாலின் தயாரா என அமைச்சர் ஜெயகுமார் சவால் விடுத்துள்ளார்.
அரசியலில் கண்ணியம் காக்க வேண்டும் என்றும், நாகரிகமாகப் பேச வேண்டும் என்றும் திமுக தலைவர் தன் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே, ஸ்டாலின் மட்டுமல்லாமல் யாரை எதிர்த்தும் தேர்தலில் களமிறங்க தாம் தயாராக இருப்பதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
திருவையாறில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த யாரை வேண்டுமானாலும் அவர்கள் தேர்வு செய்து போட்டியிடும் தொகுதியிலேயே தம்மால் எதிர்கொள்ள முடியும் என்றார்.
நாம் தமிழர் கட்சியின் சீமானும் அண்மையில் ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நிற்கப் போவதாக கூறியிருந்தார்.
ஆனால் இத்தகைய சவால்களை எல்லாம் மு.க.ஸ்டாலின் பொருட் படுத்துவதில்லை என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.
"சென்னை எப்போதுமே திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. மு.க.ஸ்டாலின் தனது தொகுதி மக்களிடம் நற்பெயர் பெற்றுள்ளார்.
"எனவே சென்னையில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கைப்பற்றுவதும் ஸ்டாலினை அவரது தொகுதியில் வீழ்த்துவதும் சுலபமல்ல," என்கிறார்கள் அரசியல் கவனிப்பாளர்கள்.

