தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்டங்கள் தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
அேதபோல் இந்த ஆண்டும் முதல்கட்டமாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
மதுரையில் இன்றுமுதல் 16ஆம் தேதிவரை இப்போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது.
இந்நிலையில், இப்போது மேலும் ஆறு மாவட்டங்களில் இன்று முதல் 31ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தேனி, திருப்பூர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுப் போட்டியுடன் வடமாடு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழா ஆகிய வீர விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
இதுதொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறை செயலர் கே. கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில், "ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சு விரட்டு, எருதுவிடும் விழா ஆகிய வற்றை இன்று முதல் 31ஆம் தேதி வரை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதி அளித்துள்ளார்.
"அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியகாளையம் புத்தூர், உலகம்பட்டி, ஏ.வெள்ளோடு உள்ளிட்ட இடங்களிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டினம், அலசீபம், செம்படமுத்தூர், குப்பச்சிப்பாறையிலும் தேனி மாவட்டத்தில் பல்லவராயன்பட்டியிலும் திருப்பூர் மாவட்டத்தில் அழகுமலை பகுதி யிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை அம்மன்குளத்திலும் சிவகங்கை மாவட்டத்தில் சிறாவயல், கண்டிபட்டி, குன்றக்குடி உள்ளிட்ட இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன," எனக் கூறியுள்ளார்.