தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பார்வையாளர்களை பந்தாடிய காளைகள்: நால்வர் பலி; ஏராளமானோர் படுகாயம்

2 mins read
0841fdb6-61c1-4b1b-93bb-1848fba402ab
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மஞ்சுவிரட்டிலும் காளைகள் பந்தாடியதால் படுகாயம் அடைந்தவர்களில் நால்வர் மாண்டுவிட்டனர் என்றும் சுமார் 100 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் தெரிவித்தன. படம்: ஊடகம் -

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மஞ்சுவிரட்டிலும் காளைகள் பந்தாடியதால் படுகாயம் அடைந்தவர்களில் நால்வர் மாண்டுவிட்டனர் என்றும் சுமார் 100 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் தைப் பொங்கல் பண்டிகையையொட்டி, சுற்றிலும் அடைக்கப்பட்ட திடல்களில் ஜல்லிக்கட்டு என்ற பெயரிலும் திறந்த வெளியில் மஞ்சுவிரட்டு என்ற பெயரிலும் காளைகளை அடக்கும் வீர விழா நடத்தப்பட்டு வருகிறது.

அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின்போது தன் நண்பரின் காளை முட்டித் தள்ளியதில் பலத்த காயமடைந்த நவமணி என்பவர் மரணமடைந்துவிட்டார்.

மதுரை அலங்காநல்லூர் போட்டியில் சுமார் 52 பேர் காயம் அடைந்தனர். அதேபோல சிவகங்கை மாவட்டத்தில் கண்டுபட்டியில் நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டி காயம் அடைந்த விஜயராகவன் என்பவர் உயிரிழந்துவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் சிராவயலில் காளைகள் பாய்ந்ததில் போஸ் என்ற 62 வயது முதியவரும் சி. பெரியகருப்பன் என்ற 80 வயது முதியவரும் மாண்டுவிட்டதாக அதிகரிகள் தெரிவித்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 749 காளைகளும் 700க்கும் மேற்பட்ட வீரர்களும் களம் இறங்கினர். 12 காளைகளை அடக்கி மாவீரனாக முடிசூட்டப்பட்ட கண்ணன் என்பவருக்கு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.

குருவித்துறையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரின் காளை, வீரர்களின் பிடியில் சிக்காமல் சீறிப் பாய்ந்து ஏராளமானவர்களுக்கு அச்சத்தைக் கிளப்பியது. அந்தக் காளைக்கு முதல் பரிசாக ஒரு கார் வழங்கப்பட்டது.

ஒன்பது காளைகளை அடக்கிய கருப்பணன், எட்டு காளைகளை அடங்கிய சக்தி ஆகிய இருவருக்கும் அடுத்தடுத்த பரிசுகள் கொடுக்கப்பட்டன.

இவர்களும் இதர பலரும் தங்கக் காசுகள், சைக்கிள் முதல் அண்டா வரை பல விதமான பரிசுகளைப் பெற்று வெற்றிக் களிப்பில் திளைத்தனர்.

குறிப்புச் சொற்கள்
ஜல்லிக்கட்டு